Thursday, 27 August 2015

குதிரைவாலியரிசிக் கிச்சடி.

தமிழ்நாட்டில் அநேகமாக  உடல்நலம் ஸரியில்லை என்றால் லேசான ஆகாரமாகக் கஞ்ஜி வைத்துக் கொடுப்பது வழக்கம்.    பத்தியம் என்றால்  காரமில்லாத  மிளகுரஸம், சாதம் இப்படி வழக்கம். இதுவே வட இந்தியாவில் கஞ்சிப் பழக்கமெல்லாம் கிடையாது. ஜுரம்,குளிர்,வயிறு ஸரியில்லை போன்றவைகளுக்குக் எளிதான லேசான ஆகாரம் என்றால் கிச்சடிதான். சற்று உடல்நலம்  சுமாரானால்   கறிகாய்கள் சேர்த்துக் கிச்சடிதான்.  அரிசி பருப்பு சேர்த்துச் செய்யும் கிச்சடியைக் குக்கரில் செய்தால் ஸரியான ருசி வராது என்று  நேர்முகமாகப் பாத்திரத்தில் வேக வைத்தே செய்வார்கள்.   ஒருநாள் ஸாதாரணமாக   குதிரைவாலி அரிசியில் செய்து சாப்பிடுவோம் என்று கிச்சடி  செய்தேன். கறிகாய்கள் சேர்த்து  பருப்பு சேர்க்காமல் சிறுதானியவகை  கிச்சடியும் ருசிக்கக் கிடைத்தது. நீங்களும் செய்து ருசிக்கலாமே!
 சிறுதானியங்கள் இப்பொழுது பிரபலமாகிக்கொண்டு வருகிரது.  உடல்நலத்திற்குகந்ததகவும் இருக்கிறது.  பார்க்கலாமே. வேண்டும் ஸாமான்கள். நான் ஒரு அரைகப் அளவிற்குச் செய்தேன்.

குதிரைவாலி அரிசி  அரைகப்.  நறுக்கிய வெந்தயக்கீரை ஒரு டேபிள்ஸ்பூன்
 நறுக்கிய சில துண்டுகள் கேப்ஸிகம்,  சின்ன ஸைஸ் கேரட் ஒன்று நறுக்கியது,ஒரு பிடி நறுக்கிய வெங்காயம்,ஒரு தக்காளியின் சிறு துண்டுகள், இரண்டாகக் கீறிய பச்சை மிளகாய் ஒன்று.  சிறியதுண்டு இஞ்சி. இரண்டு மூன்று டீஸ்பூன்ஸ்பூன் எண்ணெய்.
செய்முறை.    குதிரைவாலி அரிசியை அரைமணிநேரம் ஊறவைத்து நன்றாகக் களைந்து  வடிக்கட்டவும்.
சிறிய குக்கரில்  எண்ணெயைக் காயவைத்துத் துளி சீரகம்
தாளித்துக் கொட்டி வெங்காயத் துண்டுகள்,  மற்றும் கீரையை வதக்கவும்.  மற்ற காய்கறித்துண்டுகள்,பச்சைமிளகாய் சேர்த்துப் பின்னும் வதக்கவும்.  வடிக்கட்டி வைத்திருக்கும் அரிசியைச் சேர்த்து நன்றாகப் பிரட்டி மூன்று பங்கு தண்ணீரைச் சேர்க்கவும். இஞ்சியைத் தட்டிச் சேர்த்து  திட்டமாக உப்பும் சேர்த்து பிரஷர் குக்கரில் நான்கு விஸில் வரை வைத்திருந்து இரண்டொரு நிமிஷம் ஸிம்மில் வைத்து இறக்கவும்.   சற்றுத் தளர்வாக கிச்சடி வெந்திருக்கும்.  உடன் தயிர்ப்பச்சடியுடன் சாப்பிட ருசியாக இருக்கும்.    தளர்வாக வேண்டாமென்றால் தண்ணீரைக்  குறைவாக வைத்து , ஒரு விஸில் குறைவாகவே இறக்கலாம்.
இதுவே சிறிது  பயத்தம் பருப்பு சேர்த்தும் செய்யலாம். எளிமையான  ஆரோக்கியமான   குறிப்பு.  மேலும் வேண்டிய காய்களைச் சேர்த்தும் செய்யலாம்.

Wednesday, 19 August 2015

மசித்த உருளைக்கிழங்கு


ப்ளாகை ஆரம்பிக்கும் போது என் வழக்கமான சமையல் குறிப்புகளுடனே ஆரம்பம் செய்வோம் என்றுத் தோன்றியது. யோசனையேஇன்றி  என்னை வைத்து எவ்வளவு விதம் செய்தாகிறது. அதில் ஏதாவது போடேன் என்று சொல்வதுபோல இருந்தது.  எது என்று கேட்கிறீர்களா. வெந்து தோலுரித்த உருளைக்கிழங்குதான்  சொல்லாமற் சொல்லியது. அப்படியா?; நான்கைந்து குறிப்புகள் அப்படியே பொதுவாக எழுதுவோம் என்று தோன்றியது.  பார்க்கலாமா?  இரண்டு பெரியஉருளக்கிழங்கைவேகவைத்தோ,மைக்ரோ அவனில் வேக வைத்தோ தோல் உரித்துக் கொள்லலாம். குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த சுலபமான மாஷ் பொடேடோ செய்யலாமா.?
தோலுரித்த வெந்த உருளைக்கிழங்கைச் சூடாக இருக்கும் போதே அழுத்தமான கரண்டியினால் மசித்துக் கொள்ளவும்.  ஒரு டீஸ்பூன் வெண்ணெயைச் சிறிது சூடாக்கிச் சேர்த்து கால் டீஸ்பூன் மிளகுப்பொடி,திட்டமான உப்பு சேர்த்து மசிக்கவும். ஒரு டீஸ்பூன் சூடான பால்கூட சேர்க்கலாம்.  காரம் கொஞ்சம் அதிகம் சேர்த்தால் பெரியவர்களும் விரும்பி உண்ணலாம்.  சுலபமானது இல்லையா?
  இரண்டு ஸ்லைஸ் பிரட்டைத் தண்ணீரில் ஒரு நிமிஷம் ஊற வைத்து எடுத்துத் தண்ணீரை ஒட்டப் பிழிந்து எடுக்கவும். அதனுடன்  மசித்த உருளைக்கிழங்கையும் சேர்த்துச்   சிறிது உப்பு சேர்த்துப் பிசையவும். அழுத்தமாகப் பிசைந்து சிறிய  நீண்ட வடிவிலான உருளைகளாகச் செய்து
 வாணலியில் எண்ணெயை மிதமாகக் காயவைத்து அதில் போட்டுப் பொரித்து எடுக்கவும். தக்காளிசாஸ்,அல்லது கெச்சப்புடன்  சாப்பிடக் கொடுத்தால்  ஒரு நிமிஷத்தில் பறந்து விடும். அல்லது நம் வீட்டு எல்லாத் தொக்குகளுடனும் சாப்பிட நன்றாக இருக்கும். பிடிக்கிறதா பாருங்கள்.
நன்றாக மசித்த உருளைக்கிழங்குடன் , நறுக்கியபச்சைமிளகாய்,கொத்தமல்லி இலை,உப்பு இவைகளைச் சேர்த்துப் பிசைந்து எடுத்துப் பொத்தலில்தாத வடைகளாகத்தட்டி,தோசைக்கல்லிலோ,நான்ஸ்டிக் பானிலோ சுற்றிலும் தாராளமாக எண்ணெயை விட்டுச் சிவக்க வேகவைத்துத் திருப்பிப்போட்டு வேகவைத்து எடுத்தால்  ஆலு டிக்கி தயார்.

  சோலே,டொமேடோ சாஸ் , புளிச்சட்னி,தயிர் இவைகளுடனும் சாப்பிட இதுவும் ஒரு ஐடம் தானே.?
வேகவைத்த உருளைக்கிழங்கை சிறுதுண்டங்களாகப் பிசைந்து, இஞ்சி,பச்சைமிளகாய், வெங்காயம் வதக்கிச்சேர்த்து தாளித்துக் கொட்டி,உப்பு சேர்த்து,  கெட்டியாகக் கரைத்த,கடலைமாவுக்கலவையில் உப்புகாரம் சேர்த்து  கிழங்குக் கலவையை சிறிய உருண்டைகளாகத் தோய்த்தெடுத்து காயும் எண்ணெயில் போட்டு சிவக்க வேக வைத்து எடுத்தால் உருளைக்கிழங்கு போண்டா ரெடி.
இப்படி வேறு வகைகளும் நம் இஷ்டம் போல் செய்யலாம்.  முதல்ப்  பதிவு. பொதுவாக எழுதியிருக்கிறேன். பாருங்கள்.Monday, 10 August 2015

என் அறிமுகம்.

நான் சொல்லுகிறேன் என்ற  தளத்தை  வேர்ட்ப்ரஸ் டாட்காமில்   எழுதிவருகிறேன்.  ப்ளாகரிலும்  எழுதவேண்டும் என்ற எண்ணம் நெடு நாட்களாகவே இருந்து வருகிறது. என்ன எழுதுவது என்ற யோசனைகள் எதுவும்  இல்லை. ப்ளாகரில் நிறைய பேர்களை  அறிமுகப்படுத்திக் கொள்ளலாம் என்ற ஒரு எண்ணம்தான்  காரணம்.  இவ்வளவு வயதிற்கு மேல்  இப்படியும் ஒரு ஆசை.    பார்ப்போமே.   வயதானவர்களுக்கு இது ஒரு பொழுது போக்கு.   இதுவும்   மற்றவர்கள் ஒத்தாசையுடன்தான் நிறைவேறும். வேறு வேலை இல்லையா என்று யாராவது ஒருவர் கேட்டாலும் போய்விட்டது.
லேப்டாப் வாங்கிக்கொடுத்து,அதற்குண்டான வசதிகளையும் செய்து கொடுக்க மனமும் வேண்டும்.   பொருள் வசதியும் இருக்கிறவர்களாலேயே முடிந்த காரியமும் இது.  நமக்கும் ஆர்வம் வேண்டும். எனக்கு 83 வயது முடிந்து விட்டது.    வயது ஆக ஆக   இதிலேயே லயித்து விட்டால் ஏதாவது  சிறு தொந்திரவு நேரும் போது அவர்களுக்கு நமக்குச் செய்யும் படியான உதவிகளும் தேவையாக உள்ளது. அதுவும் ஆங்கிலப் புலமை இல்லாதவர்களுக்கு    சிரமங்களும் இருக்கிறது. என்போன்றவர்கள்    தீவிரவாதிகள் கணக்கில்   கம்யுட்டருக்கு அடிமையாகிவிட்டதுபோன்ற ஒரு மலைப்பும் தட்டுகிறது.   ப்ளாகருக்கு ஒரு பேர் சொல்லு என்றால் ப்ளாகரில் காமாட்சிஸ்  போஸ்ட் என்று எழுதுகிறார்கள் எப்படி எழுதினாலும் காமாட்சி என்ற பெயர் பொருத்தமாக இருக்கும் என்று இப்பொழுது தோன்றுகிறது. அதனால் காமாட்சியாகவே   வருகிறேன். அதிகம் ப்ளாகரில் வழிமுறைகள் தெரியாது.    நீங்கள் எல்லாம் தெரியாததற்கு  வழி முறைகள் சொல்லுவீர்களென்று நம்பிக்கையுடன் வருகிறேன்.     என்னுடைய வயது எல்லோருக்கும் அன்பையும் ஆசியையும் அளிக்கக் கூடியதான வயது. அதைக் கட்டாயம் பெறுவீர்கள் உங்கள் யாவரின்  ஆதரவையும் அன்பையும் நானும் எதிர் பார்க்கிறேன். இப்படிக்கு அன்புடன் காமாட்சி மஹாலிங்கம்.