Saturday 22 July 2017

காரஸார டொமேடோரைஸ்




காரஸாரமான டொமேடோரைஸ்.
நல்ல வண்ணம் நிறைந்த தக்காளிச் சாதம். காரமும் தான்.
நல்ல பழுத்த பெங்களூர் தக்காளி வகை நிரம்பவும் நல்லது.   கலந்த சாத வகைகளில் இதுவும் ஓரிடத்தைப் பிடித்து விட்டது.
சின்னவர்கள்,பெரியவர்கள் எல்லோரும் விரும்பி ருசிப்பது. நீங்களும் ருசியுங்கள்.
கலந்த சாதங்களுக்கெல்லாம், சற்று மெல்லிய நீண்டவகை அரிசிகள் மிகவும் நல்லது. நாம் எந்த வகை அரிசி உண்கிரோமோ அதில் தயாரிப்பதுதான் சுலபம்.
சற்றுப் பருமனான அரிசி வகைகளுக்கு துளி காரம்,உப்பு அதிகம் வேண்டுமாக இருக்கலாம்.
செய்து,செய்து இரண்டொரு முறை பழக்கப் பட்டால், நீங்களே பல பேருக்கு வகை சொல்லுவீர்கள்.
வேண்டியவைகள்
நன்றாகப் பழுத்த கலரான தக்காளி---4 பெரியது.
வெங்காயம்---பெரியசைஸ்---1
இஞ்சி---அரை அங்குலத் துண்டு
நல்லெண்ணெய்----2 டேபிள்ஸ்பூனிற்கு அதிகம்
கடுகு---அரை டீஸ்பூன்
கடலைப் பருப்பு,வேர்க்கடலை வகைக்கு 2 டீஸ்பூன்கள்
மிளகாய்ப்பொடி----அரை டீஸ்பூன் ,பெருங்காயப் பொடி  சிறிது
டொமேடோ சாஸ் அல்லது கெச்சப்-----1 டீஸ்பூன்
ருசிக்கு உப்பு
வற்றல் மிளகாய்----1
அரிசி---11/2 கப் கறிவேப்பிலை  வேண்டிய அளவு.
செய்முறை.
அரிசியை உதிர் உதிரான சாதமாகச் செய்து, தாம்பாளத்தில்கொட்டி ஆறவிடவும்.
ஒரு பாத்திரத்தில் தண்ணீரைக் கொதிக்க வைத்து, தக்காளிப்பழத்தை அதில் போட்டு  இறக்கி ஒரு தட்டினால் மூடி வைக்கவும்.
தண்ணீர் ஆறிய பிறகுதக்காளிப்பழத்தைவெளியிலெடுத்து  ஒவ்வொன்றாகத் தோலை உரிக்கவும்.
உரித்த தக்காளி,நறுக்கிய வெங்காயம், இஞ்சி இவைகளை மிக்ஸியில் தண்ணீர் விடாது அறைத்துக் கொள்ளவும்
வாணலியில் எண்ணெயைக் காயவைத்து,மிளகாய்,கடுகு,பெருங்காயம் தாளித்து,பருப்பு வகையையும் சேர்த்து சிவக்க வருக்கவும்
கரிவேப்பிலையை உருவிச் சேர்த்து  அரைத்த விழுதைக் கொட்டிக் கிளரவும். மிளகாய்ப் பொடி சேர்க்கவும்.
உப்பு,டொமேடோ சாஸ் சேர்த்து மிதமான தீயில் சுருளக் கிளரவும்.
எண்ணெய் பிரிந்து தொக்கு மாதிரி சேர்ந்து வரும் போது, சாதத்தையும்
சேர்த்துக் கிளறி சூடேறினதும் இறக்கி வைத்து உபயோகிக்கவும்.
ருசியான கலர்ஃபுல் டொமேடோரைஸ் தயார்.
உருளைசிப்ஸ்,அப்பளாம் பொரித்தது இவை எல்லாம்  இதனுடன் ருசியோ ருசிதான். வாழைக்காய் வறுவல்,நேந்திரங்காய் வருவல்,மிக்சர் சேர்த்து சாப்பிட்டுப் பாருங்கள்.
சாஸோ,கெச்சப்போ சேர்த்தால் கலர்,ருசி இரண்டும் கூடுதலாகக் கிடைக்கும்.
ஸ்கூலில் லன்ச் சாப்பிடும்போது பருப்புகளெல்லாம் வேண்டாம் என்று
பேத்தியின் விருப்பத்திற்கிணங்க  செய்தது இது. நீங்கள் பருப்புகளெல்லாம் போடுங்கள். முந்திரியும்  போடலாம்.

பார்ப்போமா அரிசிகூட பாஸுமதி இல்லை  இது. சீரகச்சம்பா போன்ற அரிசி .  மேலே உள்ளபடம்  மாதிரிக்குதான்.