Wednesday 19 August 2015

மசித்த உருளைக்கிழங்கு


ப்ளாகை ஆரம்பிக்கும் போது என் வழக்கமான சமையல் குறிப்புகளுடனே ஆரம்பம் செய்வோம் என்றுத் தோன்றியது. யோசனையேஇன்றி  என்னை வைத்து எவ்வளவு விதம் செய்தாகிறது. அதில் ஏதாவது போடேன் என்று சொல்வதுபோல இருந்தது.  எது என்று கேட்கிறீர்களா. வெந்து தோலுரித்த உருளைக்கிழங்குதான்  சொல்லாமற் சொல்லியது. அப்படியா?; நான்கைந்து குறிப்புகள் அப்படியே பொதுவாக எழுதுவோம் என்று தோன்றியது.  பார்க்கலாமா?  இரண்டு பெரியஉருளக்கிழங்கைவேகவைத்தோ,மைக்ரோ அவனில் வேக வைத்தோ தோல் உரித்துக் கொள்லலாம். குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த சுலபமான மாஷ் பொடேடோ செய்யலாமா.?
தோலுரித்த வெந்த உருளைக்கிழங்கைச் சூடாக இருக்கும் போதே அழுத்தமான கரண்டியினால் மசித்துக் கொள்ளவும்.  ஒரு டீஸ்பூன் வெண்ணெயைச் சிறிது சூடாக்கிச் சேர்த்து கால் டீஸ்பூன் மிளகுப்பொடி,திட்டமான உப்பு சேர்த்து மசிக்கவும். ஒரு டீஸ்பூன் சூடான பால்கூட சேர்க்கலாம்.  காரம் கொஞ்சம் அதிகம் சேர்த்தால் பெரியவர்களும் விரும்பி உண்ணலாம்.  சுலபமானது இல்லையா?
  இரண்டு ஸ்லைஸ் பிரட்டைத் தண்ணீரில் ஒரு நிமிஷம் ஊற வைத்து எடுத்துத் தண்ணீரை ஒட்டப் பிழிந்து எடுக்கவும். அதனுடன்  மசித்த உருளைக்கிழங்கையும் சேர்த்துச்   சிறிது உப்பு சேர்த்துப் பிசையவும். அழுத்தமாகப் பிசைந்து சிறிய  நீண்ட வடிவிலான உருளைகளாகச் செய்து
 வாணலியில் எண்ணெயை மிதமாகக் காயவைத்து அதில் போட்டுப் பொரித்து எடுக்கவும். தக்காளிசாஸ்,அல்லது கெச்சப்புடன்  சாப்பிடக் கொடுத்தால்  ஒரு நிமிஷத்தில் பறந்து விடும். அல்லது நம் வீட்டு எல்லாத் தொக்குகளுடனும் சாப்பிட நன்றாக இருக்கும். பிடிக்கிறதா பாருங்கள்.
நன்றாக மசித்த உருளைக்கிழங்குடன் , நறுக்கியபச்சைமிளகாய்,கொத்தமல்லி இலை,உப்பு இவைகளைச் சேர்த்துப் பிசைந்து எடுத்துப் பொத்தலில்தாத வடைகளாகத்தட்டி,தோசைக்கல்லிலோ,நான்ஸ்டிக் பானிலோ சுற்றிலும் தாராளமாக எண்ணெயை விட்டுச் சிவக்க வேகவைத்துத் திருப்பிப்போட்டு வேகவைத்து எடுத்தால்  ஆலு டிக்கி தயார்.

  சோலே,டொமேடோ சாஸ் , புளிச்சட்னி,தயிர் இவைகளுடனும் சாப்பிட இதுவும் ஒரு ஐடம் தானே.?
வேகவைத்த உருளைக்கிழங்கை சிறுதுண்டங்களாகப் பிசைந்து, இஞ்சி,பச்சைமிளகாய், வெங்காயம் வதக்கிச்சேர்த்து தாளித்துக் கொட்டி,உப்பு சேர்த்து,  கெட்டியாகக் கரைத்த,கடலைமாவுக்கலவையில் உப்புகாரம் சேர்த்து  கிழங்குக் கலவையை சிறிய உருண்டைகளாகத் தோய்த்தெடுத்து காயும் எண்ணெயில் போட்டு சிவக்க வேக வைத்து எடுத்தால் உருளைக்கிழங்கு போண்டா ரெடி.
இப்படி வேறு வகைகளும் நம் இஷ்டம் போல் செய்யலாம்.  முதல்ப்  பதிவு. பொதுவாக எழுதியிருக்கிறேன். பாருங்கள்.



3 comments:

  1. காமாஷிமா,

    ஆலு டிக்கியும், ஆலு போண்டாவும் சூப்பரா இருக்கு. முதல் ஆளாக எடுத்துக்கொள்கிறேன். அன்புடன் சித்ரா.

    ReplyDelete
    Replies
    1. அறிமுகத்தில் டிடி வந்து வாழ்த்துகூறினார். முதல் ஆளாக வந்து டிக்கியையும்,போண்டோவையும் ரஸித்ததற்கு மன முவந்த நன்றிகள். சூப்பரா. செய்து சாப்பிடவும். அன்புடன்

      Delete
  2. சொல்லத் தயக்கமாத்தான் இருக்கு.(ஏன்னா, 84+ வயசுல கஷ்டப்படுத்தலாமா?) இருந்தாலும், நீங்கள் அடிக்கடி எழுதுங்கள். இந்தத் தளத்தில் 3-4 செய்முறை எழுதியிருக்கீங்க. நான் அதனை என்னுடைய Word Documentல் காபி எடுத்துக்கொண்டேன். நிறைய எழுதுங்கள். மிகவும் உபயோகமாக இருக்கிறது (எனக்கும், நிச்சயம் என்னைச் சேர்ந்தவர்களுக்கும்)

    ReplyDelete