Tuesday 27 March 2018

பன்னா என்னும் மாங்காய் ஜூஸ்



வெகு நாட்களுக்குப் பிறகு  தாக சாந்திக்கேற்ற ஜூஸுடன் வருகிறேன். இதன் பெயர்  பன்னா.   மாங்காயில் செய்யப்படுவது.
நீங்களும் கேள்விப் பட்டிருப்பீர்கள்.
வட இந்தியாவில்   மாங்காய் சீஸனில்  கட்டாயம் இதைச் செய்கிரார்கள். செய்வதும் எளிது.   ருசியும் இருக்கிறது.  குடி பட்வா  சிறப்புப் பானமும் இது.

புளிப்பு ருசி பிடிக்காதவர்கள் அதிக புளிப்பில்லாத மாங்காயில்  செய்து ருசிக்கலாம்.
கிளிமூக்கு மாங்காய் போன்ற வகைகளிலும் செய்யலாம்.
என்னுடைய  மருமகள்   அடிக்கடி செய்வதால்  எனக்கு மிகவும் பிடிக்கும்.
நம் பக்கத்தில் ஐயோடி! இருக்கிற வெய்யில் போதாதா?  மாங்காய் உஷ்ணமாச்சே.   அதிலே ஜூஸ் வேறு செய்து சாப்பிட்டால் உடம்பிற்கு ஆகுமா என்பார்கள். பொதுவாக இம்மாதிரி வார்த்தைகள்தான் வரும்.  ஆனால் அப்படி இல்லை.
வெயில் நேரத்தில் ஜில் என்ற இந்த ஜூஸ் குளிர்ச்சியைத் தரும். தாக சாந்தியாகும். வெந்த மாங்காய். ஆதலால் நல்லதே!
மாங்காயில்  எவ்வளவு வகை செய்கிறோம்?   அப்படி இதுவும் ஒன்று.
வாருங்கள் நாமும் சற்று முற்றிய மாங்காயொன்றில்  செய்வோம்.
வேண்டியவைகள்.

மாங்காய்---ஒன்று.
சர்க்கரை-- நான்கு டீஸ்பூன்,  ருசிக்குத் தக்க அதிகரிக்கவும்.
சின்ன துண்டு இஞ்சி
புதினா இலை--4
காலாநமக் என்னும் இந்துப்பு  அரை டீஸ்பூன்.
ஏலக்காய்--1
சின்ன குக்கரில் ஒரு டம்ளர் தண்ணீருடன் முழு மாங்காயைச் சேர்த்து நான்கு விஸில் சத்தம் வரும்வரை வேக வைத்து இறக்கவும்.
இல்லை, பருப்பு வேகவைக்கும் போது  வேறு ஒரு ஸப்ரேட்டரில்  அதன் மேல் வைத்துவேக வைத்தாலும்ஸரி.

ஆறினவுடன் மாங்காயின் மேல்த் தோலை நீக்கவும்.
மாங் கதுப்புக்களை ஒரு ஸ்பூனினால்  கொட்டையினின்றும் தனியாகப் பிரித்துக் கொட்டையை நீக்கி விடவும்.
வெந்த மாங்கதுப்புகளுடன்,புதினா,இஞ்சி,ஏலக்காய்,காலாநமக் சேர்த்து மிக்ஸியில்    குளிர்ந்த  நீர் சேர்த்து அரைக்கவும்.


அரைத்த விழுதில் இரண்டு கப் அளவு குளிர்ந்த நீர் சேர்த்துக் கரைத்து, வடிகட்டியில்   வடிக்கட்டவும்.

. சர்க்கரை சேர்த்துக் கலக்கவும். ருசி பார்த்து வேண்டியவைகளை அதிகரித்து, கோப்பைகளில் நிறப்பி அழகு பார்த்துப் பருகவும்.  ருசியான பன்னா!
புளிப்புக்கேற்ப   இனிப்பும்,தண்ணீரும் அதிகமாக்கலாம்.
ஸ்ரீராம நவமி  நிவேதனத்தில்   பன்னாவும்  சேர்த்து விட்டேன். நாம் மட்டும் ருசிக்கலாமா?

17 comments:

  1. பன்னா என்றதும் ஹீரா பன்னா பாடல் நினைவுக்கு வந்து விட்டது!

    ReplyDelete
    Replies
    1. நல்ல நினைவுதான். உங்கள் சினிமா பாடல் நினைவுகள் என்னைப் போன்றவர்களுக்கு ஆச்சரியம்தான். எனக்கு ஞாபகம் வந்தது நேபாலியில் பன்னா என்றால் பச்சைநிற நவரத்தினக்கல். ஆண் குழந்தைகளுக்குப் பன்னா என்று பெயரும் வைப்பார்கள். எப்படி எனக்கு நேபாளம் மனதில் வருகிறது?

      Delete
  2. இதுவரை இதனைச் சுவைத்ததில்லை. மாங்காய் கிடைத்து ஒருமுறை செய்ய வேண்டும். ஸ்ரீராம நவமிக்கு வேப்பம்பூவும் வெல்லமும் புளியும் சேர்த்து பச்சடி செய்வோம் இல்லையா?

    ReplyDelete
    Replies
    1. சென்னையில் மாங்காய்க்கு என்ன பஞ்சம்? நல்லி வாசலிலே கிளிமூக்கு மாங்காய் விற்பார்களே? எந்த மாங்காயானாலும், சற்று சதைபிடிப்பான மாங்காய் வாங்கினால்ப் போதுமே! ஸ்ரீராம நவமிக்கு நீர்மோர்,பானகம், கோசும்பரி,வெல்ல அவல்,புளியவல் என்று வினியோகத்திற்கு மற்றும் பல உண்டு. வேப்பம்பூ பச்சடி தமிழ் வருஷப்பிறப்பிற்குதான் செய்யும் வழக்கம். ஸ்ரீராம நவமிக்கு இல்லை. பின்னூட்டத்திற்கு நன்றி. அன்புடன்

      Delete
  3. ஸ்ரீராம நவமி நிவேதனத்தில் பன்னாவும் சேர்த்து விட்டேன். நாம் மட்டும் ருசிக்கலாமா?//


    கண்டிப்பாய் ருசிக்காலாம்.
    புதுவகையான ஜூஸ்
    செய்துப்பார்க்க தூண்டுது.
    ராமர் மகிழ்ந்து இருப்பார் ருசியான நிவேதனத்தில்.

    ReplyDelete
    Replies
    1. பிள்ளை,நாட்டுப்பெண் யாவருமே ஊரிலில்லை. பொம்மை கல்யாணத்திற்கு செய்வதுபோல சிறிது. மாங்காய் இருந்தது. ஸரி என்று மற்றவர் உதவியுடன் ப்ளாகிற்காக செய்தேன். ராமர் மகிழட்டும். ஸந்தோஷம். ஊக்கம்தரும் பின்னூட்டம். நன்றி. அன்புடன்

      Delete
  4. வாங்ககோ காமாட்சி அம்மா...நலமா எப்படி இருக்கீங்க...

    பன்னாசெய்வதுண்டு அம்மா....மிகவும் பிடிக்கும்....நான் வெள்ளைச் சர்க்கரைக்குப் பதிலாக ப்ரௌன் சுகர் சேர்க்கிறேன்..புதினாவைத் தனியாக வைத்துப் பிடித்தவர்களுக்கு மேலே கட் செய்து போடுவதுண்டு...இந்துப்புதான் சேர்க்கிறேன்..வீட்டிலும் எல்லோருக்கும் மிகவும் பிடிக்கும்....ஏலக்காய் சேர்த்ததில்லை....உங்கள் குறிப்புகளையும் குறித்துக் கொண்டுவிட்டேன் காமாட்சிமா...மிக்க நன்றி அம்மா

    கீதா

    ReplyDelete
    Replies
    1. சுயவேலைகளைத் தானாக செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் காலம் ஓடிக்கொண்டு இருக்கிறது. இங்கும் வெள்ளைச் சர்க்கரை உபயோகப் படுத்துவதில்லை. எழுதும் போது இன்னும் விரிவாக எழுதி இருக்கலாம். எதையாவது எழுதவேண்டும் என்ற ஆர்வத்தில் இப்படி. கீதாவிற்கு தெரியாததே இல்லையா? கீதா என்ற பெயரே அப்படிதான் போலும்? பன்னா எல்லோருக்கும் உங்கள் வீட்டில் மிகவும் பிடிக்கும். ஸந்தோஷமாக உள்ளது. சில குறிப்புகளை நம் ரஸனைக்கேற்ப மாற்றுவதுதான் சிறந்த வழி. உன் விசாரிப்புகளுக்கும், பின்னூட்டத்திற்கும் மிகவும் நன்றி. அன்புடன்

      Delete
  5. பன்னா ஜூஸ. அருமையா இருக்கு. வெகு சுலபம். செய்துபார்த்திட வேண்டியதுதான்.

    ராமநவமிக்குச் செய்து அசத்திவிட்டீர்களே. பாராட்டுகள்.

    ReplyDelete
    Replies
    1. நெல்லைத்தமிழன் அசத்தல் ஒன்றுமில்லை. விளையாட்டுமாதிரி ஒரு நிவேதனம் என்ற பெயர். செய்து பாருங்கள் பன்னாவை. பாராட்டுகளுக்கு மிகவும் நன்றி. நீங்கள் இந்தியா வரும் செய்திகள் ஸந்தோஷமளிக்கிறது. அன்புடன்

      Delete
  6. எளிமையா இருக்கு..செய்து பார்க்கிறேன் அம்மா..

    ReplyDelete
    Replies
    1. வா,வா ஆதி. எளிமைதான். அழகான உன் மண் பாண்ட கலெக்க்ஷனில் இதை எழுதி வெளியிடு. ஜில் என்று இருக்கும். நன்றி அன்புடன்

      Delete
  7. எவ்வளவு இதமா,பதமா எழுதுகிறீர்கள் காமாக்ஷி மா. மாங்காய் இருக்கு
    செய்து பார்க்கிறேன்.நன்றி மா.

    ReplyDelete
  8. வல்லிம்மா வாங்கோ. இதம்,பதத்துடன் மிதமாக இருந்தால் ஸரி. செய்து பாருங்கள். மகிழ்ச்சி. நீங்கள் விழுந்து எழுந்து சுகமில்லாத அதே நேரம் எனக்கும் அதே நிகழ்வு. நல்லவேளை. அத்துடன் விட்டது. உங்களை விசாரித்துக்கூட எழுத முடியவில்லை. மன்னிக்கவும். நன்றி அன்புடன்

    ReplyDelete
  9. காமாக்ஷிமா,

    வித்தியாசமான பெயரில் மாங்காய் ஜூஸ், சூப்பரா இருக்குமா. தெளிவான படங்களுடன் அழகான விளக்கமும் சேர்ந்து பன்னாவின் சுவை அபாரமாக உள்ளது.

    இப்போது எங்களுக்கும் பச்சை பசேலென மாங்காய் கிடைக்கிறது. என்னவொன்று விலைதான் கூடுதலோ கூடுதல்.ஒரு காய் வாங்கினால் ஒரு நாளைக்கு சாம்பார், மறுநாள் பொடியா நறுக்கி தயிர்சாதத்தில் சேர்ப்பது, அடுத்த நாள் காரம் & உப்பு போட்டு சுவைப்பது, அப்புறம்ம்ம்ம்ம் ... வெறுமனே தின்று பார்ப்பது என ஒரு வாரத்திற்கு ஓட்டுவேன். இப்போ பன்னாவுக்காக கூடுதலா ஒரு காய் வாங்கணுமோ !

    மாம்பழம் நிறைய கிடைக்கிறது. ஆனால் காய்தான் பிரச்சினை. அன்புடன் சித்ரா.

    ReplyDelete
  10. வாங்கும் அந்த மாங்காயில் பாதியைத் தோல்நீக்கி வேகவைத்தெடுத்து, அரைத்து அதனுடன் சேர்மானங்களைச் சேர்த்துப் பன்னா செய்து ருசிக்கவும். பரிக்ஷார்த்தம் முடிந்தபின், இன்னொரு மாங்காயைப் பற்றி யோசிக்கலாம். தாமதமானபதில் என்னுடயது. நன்றி சித்ரா. அன்புடன்

    ReplyDelete
  11. வணக்கம்,

    www.tamilus.com எனும் முகவரியில் புதிய திரட்டி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. பல தமிழ் திரட்டிகளுக்கு பதிவர்களின் சரியான ஒத்துழைப்பு கிடைக்காததால் அவற்றினை மூட வேண்டிய தேவை ஏற்பட்டது. அந்த நிலையினை இத் திரட்டிக்கு கொண்டுவரமாட்டீர்கள் என்ற புதிய நம்பிக்கையுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது இந்த தமிழ்US திரட்டி.

    இத் திரட்டியின் மூலம் உங்கள் செய்திகள், பதிவுகள், கவிதைகள் உடனுக்குடன் பலரைச் சென்றடையும் வகையில் பகிர்ந்து கொள்ளமுடியும். இதனால் உங்கள் தளங்களிற்கான வருகையாளார்களின் எண்ணிக்கையையும் அதிகரிகத்துக் கொள்ளலாம்.

    அதேவேளை இத் திரட்டியில் உங்களின் பதிவைப் பகிர்ந்து இத்திரட்டிக்கான ஒத்துழைப்பை நல்குவதுடன், எமது பதிவுகள் மற்றவர்களைச் சென்றடைய facebook, twitter போன்ற சமூக வலைத் தளங்களை மட்டுமே நம்பியிருக்கிற நிலைமையையும் மாற்றமுடியும் என நம்புகிறோம்.

    நன்றி..
    Tamil US
    www.tamilus.com

    ReplyDelete