Tuesday 29 November 2016

பஜ்ஜி மிளகாய்க் கறி.

காரமில்லாத  பஜ்ஜி மிளகாய்தான்   மேலேயுள்ள படம்.  காரமே இருக்காது. நீண்ட அளவில்  சற்றுப் பருமனான  இந்த மிளகாயினுள்  அதிக விதையும் இருப்பதில்லை.
மும்பையில்  சற்றுக் குட்டையாகக் கிடைக்கும். நம்ம ஊரில் கிடைக்கிறதா யோசனை செய்தேன் .  மிளகாய் பஜ்ஜியும் பிரபலமானது  நம் ஊரிலும். ஏதாவது காரம்  சற்றுக் கூடக் குறைய இருக்கலாம் என்று நினைத்துக் கொண்டேன்.

ரொட்டி,பரோட்டாவுடன் சாப்பிட இதைக் கறிபோல என் மருமகள் செய்கிறாள். நானும் ஒரு நாள் செய்து பார்த்தேன்.
ஸரி பிளாகிலும் போடலாம். பிடித்தவர்கள்,கிடைத்தவர்கள் செய்யலாமே?

வேண்டியவைகள்.   நான் கிட்டத்தட்ட  கால் கிலோ மிளகாயில் செய்தேன்.  காரமில்லாத  பஜ்ஜி மிளகாய்.  ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்.
மிளகாய்ப்பொடி----ஒரு டீஸ்பூன்
மஞ்சள்பொடி---அரை டீஸ்பூன்
தனியாப் பொடி---இரண்டு டீஸ்பூன்.
நல்ல கடலைமாவு---இரண்டு டேபிள்ஸ்பூன்.
எண்ணெய்--மூன்று டேபிள்ஸ்பூன்.
கடுகு,பெருங்காயம்,சீரகம்  தாளித்துக் கொட்ட
ருசிக்கு ---உப்பு.
செய்யும் விதம்.
சுத்தம் செய்த    மிளகாயைக் காம்பு நீக்கி
திட்டமான துண்டங்களாக நறுக்கிக் கொள்ளவும்.
அடிகனமான வாணலியில்  எண்ணெய்விட்டு சூடாக்கி   கடுகு,பெருங்காயம் சீரகத்தை தாளிக்கவும்.
மிளகாய்த் துண்டங்களில்   சிறிதைப் போட்டுக் கிளறி  பொடிகளைப் போட்டுப் பிரட்டவும்.  ஓரளவு பொடிகள் வறுபடும்.  மீதி மிளகாய்த் துண்டங்களைச்  சேர்த்துக் கிளறி விடவும்.
ஓரளவு  மஸாலாவுடன் மிளகாய் லேசாக வதங்கும்.
கடலை மாவைப் பரவலாகத் தூவி   நல்ல முறையில்  பரவலாக மாவு எல்லாவற்றுடனும்   ஒட்டிக்கொள்ளும் வகையில்க்  கிளறி விடவும்.
தீயை மிதமாக்கி  சட்டுவத்தால்   மாவு சிவக்கும் படியாக   அடிக்கடி லேசாகக் விட்டு விட்டுக்    கிளறிக் கொடுக்கவும்.




பச்சை மாவு வாஸனை போன பின்  கால் கப் தண்ணீரைத் தெளித்து,வேண்டிய உப்பைச் சேர்த்துக் கிளறி   மூடி வைக்கவும்.
இரண்டு மூன்று நிமிஷத்தில் மாவின் ஈரப்பசை போகும்.   நன்றாக வதக்கவும்.
கையில் ஒட்டாத பதத்தில் இரக்கி  உபயோகிக்கவும்.



வேண்டுமானால் இரண்டொரு சொட்டு எலுமிச்சை சாறு சேர்க்கலாம்.
பஜ்ஜி மிளகாய்க் கறி ரெடி.
வெங்காயம்,பூண்டு,இஞ்சி எது வேண்டுமானைலும் வதக்கும் போது சேர்த்துக் கொள்ளுங்கள்.

ஸ்பிரிங் ஆனியன்,பூண்டுத்தாள் இவைகளை,  இந்த முறையில் செய்யலாம்.  முடிந்தவர்கள்,பிடித்தவர்கள் செய்யலாமே?
தண்ணீர் தெளிக்கும் போது   சிறிது சிறிதாகத் தெளிக்கவும்.

Wednesday 2 November 2016

பைனாப்பிள் இனிப்புக்காரப் பச்சடி.


வெகுநாட்களாக இந்தப்பச்சடியைச் செய்து பார்க்க எண்ணம்.  மும்பையில்  கலியாண சமையல்களில் பந்தியில்  இந்தப் பச்சடி கட்டாயம் இடம் பெறுகிறது.    ஸரி நாமும் செய்து பார்த்து விடலாம் என்ற எண்ணத்தில் செய்தது இது.  கட்டா மீட்டா என்று ஹிந்தியில் சொல்வார்கள். அது ஞாபகம் வந்தது.   நீங்களும் செய்து பார்க்கலாமே!

வேண்டியவைகள்--- பைனாப்பிள் துண்டுகள் அதான் அனாசிப்பழத்துண்டுகள்-2கப்
தேங்காய்த் துருவல்   --அரைகப். சிறிது குறைவானாலும் பரவாயில்லை.
சீரகம்--அரைஸ்பூன்,

  வெல்லம் கால்கப் .
 . பச்சைமிளகாய் --சிறியதாக இரண்டு
.புளிப்பில்லாத  தயிர் அரைகப்.
  கடுகுசிறிது, எண்ணெய் தாளித்துக் கொட்ட சிறிது. உப்பு சிறிது   மஞ்சள்பொடி. துளி





செய்முறை.
தேங்காய்,மிளகாய்,சீரகத்தைத் துளி தயிர் சேர்த்து நன்றாக அரைத்து எடுக்கவும்.

  பழத்துண்டுகளைச் சிறிது  தண்ணீருடன், உப்பும்,மஞ்சள்ப் பொடியும் சேர்த்து நன்றாக வேகவைக்கவும்.

பழம் வெந்ததும்  வெல்லப்பொடியைச் சேர்த்துக் கிளறிக் கொதிக்க வைக்கவும்.

அரைத்த தேங்காய்க் கலவையைச் சேர்த்து ஒரு கொதி விட்டுத் தயிரைச்சேர்த்து இறக்கி, கடுகைத் தாளித்துக் கொட்டவும்.
 பச்சடி தயார். மிளகாய்  காரத்திற்குத் தக்கபடி சேர்க்கவும்.
பழம் சிறிது குறைவானாலும்  பரவாயில்லை.  பச்சடி   சுவையாகத்தான் உள்ளது.





Friday 28 October 2016

வாழ்த்துகள்




அனைவருக்கும் இனிய தீபாவளி  வாழ்த்துகளையும் அன்பையும்  காமாட்சி  உங்களுடன் பகிருகிராள்.     இனிய தீபாவளி. இனிப்பும் காரமுமாகச்  சாப்பிடுங்கள்.  படமாவது போடுகிறேன்.



மைஸூர்பாகும், பொட்டுக்கடலை காரமுருக்கும்   உங்களுக்காகவே!
அன்புடன்     சொல்லுகிறேன் காமாட்சி.