Sunday 31 December 2017

வாழ்த்துகள்

அன்புள்ளம் கொண்ட பதிவர்கள் யாவருக்கும் என் இனிய  ஆங்கிலப் புத்தாண்டு  நல்வாழ்த்துகள். அன்புடன்  காமாட்சி

Thursday 7 December 2017

மூலிகை மிக்ஸ்



மூலிகையைத் தேடிக்கொண்டு போகவேண்டுமா.  அப்படியெல்லாமில்லை.  ஸுலபமாக நாம் உபயோகிக்கும் ஸாமான்கள்தான்.
பெயர் கொஞ்சம்  மாறுதலாயிருந்தால் படிக்கத் தூண்டும்.  செய்யவும் தூண்டும். இது எந்தவகையோ தெரியாது. ஆனால்  சாப்பிடத் தூண்டும்.பசியையும் தூண்டும்.  செய்வதும் ஸுலபம்தான்.  வேண்டியவைகளைப் பார்ப்போமா.

வீட்டிலிருந்தவைகளைக் கொண்டே  செய்த  ருசியான ஒரு பொடி.
பச்சைகறிவேப்பிலை--- இரண்டுகப்.சுத்தம் செய்து ஈரமில்லாமல் துணியில் பரத்தி வைக்கவும்.
முதல்நாள் வாங்கிய புதினாவைக்  காயப் போட்டிருந்தேன் . அது அரை கப் இருக்கும்.
கடலைப்பருப்பு----இரண்டு டேபிள்ஸ்பூன்.
உளுத்தம் பருப்பு ----ஒரு டேபிள்ஸ்பூன்
துவரம்பருப்பு----இரண்டு டேபிள்ஸ்பூன்
மிளகு,சீரகம் ---வகைக்கு அரை டீஸ்பூன்
வெள்ளை எள்---ஒரு டேபிள்ஸ்பூன்
காய்ந்த குண்டு மிளகாய்----நான்கு
ஒரு நெல்லிக்காயளவு புளி
உப்பு,பெருங்காயம் தேவைக்கு.
செய்முறை
வாணலியை அடுப்பில் காயவைத்து  எள்ளைப் போட்டு படபடவென்று பொரியும் படி சிவக்க வறுத்து எடுக்கவும்.
அதே வாணலியில்  பருப்புகளையும் தனித்தனியாக எண்ணெய் விடால் சிவக்க வறுத்து எடுத்துக் கொள்ளவும்.தீ நிதானமாக இருந்தால் தீயாமல் பருப்புகள் வறுபடும்.  மிளகு சீரகத்தையும் லேசாக வறுத்துக் கொள்ளவும்.
புளியையும் பிய்த்துப் போட்டு வறுத்தெடுக்கவும்.
மிளகாயைச் சொட்டு எண்ணெய் விட்டு வறுத்தால்தான் நல்லது.ஒரு அரை டீஸ்பூன் எண்ணெயை வாணலியில் காயவைத்து
   கறிவேப்பிலையைப் லேசாக வறுத்து  தீயை நிறுத்தி விடவும்  அதிலேயே வைக்கவும்.
நமுத்துப்போகாமல் இருக்கும்.
யாவும் ஆறிய பின்னர்    பருப்புகள்,மிளகு சீரகம்,மிளகாய்இவைகளை கரகர பதத்தில்  மிக்ஸியில்  பொடிக்கவும்.  வறுத்தபுளி, அல்லது  புளிப் பொடியாக இருந்தால் அதையும், வறுத்த எள்,உப்புசேர்த்து ஒரு சுற்று சுற்றவும்.  வறுத்த கறிவேப்பிலை,காய்ந்த புதினா இவைகளையும் சேர்த்து   பருப்புப்பொடி பதத்தில் அரைத்தெடுத்து   பெருங்காயப்பொடி கலந்து  ஒரு பாட்டிலில் பத்திரப் படுத்தவும். மிகவும் நைஸாக பொடிக்கக் கூடாது.
சாதத்தில்  நெய் விட்டுக் கொண்டு இப்பொடியைச் சேர்த்து சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும்.  பச்சடி,மோர்குழம்பு,வெந்தயக்குழம்பு இவைகள் ஜோடி சேரும்.  தாளித்துக்கொட்டிக் கலந்த சாதமாகவும் தயாரிக்கலாம்.
நான் நாரத்தை அல்லது எலுமிச்சை இலைகளையும் ஒன்றிரண்டு உடன் சேர்ப்பேன்.  வாஸனையாக இருக்கும்  எதுவும் மற்றவர்களுக்கு விருப்பம் வேண்டுமே!