Tuesday 13 June 2017

உருளை பனீர் கோப்தா


உருளைக்கிழங்கும்  பனீரும் சேர்த்து நாம் இப்போது  கோப்தா செய்யலாம்.  பூரி ரொட்டி முதலானவைகளுடன்  விருந்தினர்களுக்கு இரண்டு மூன்று வகை   ஸைட்டிஷ் கொடுக்க இது மிகவும் உபயோகமாக இருக்கும்.
பார்க்கவும்   அழகு.
எங்கள்வீட்டில்  பூரியுடன்  இதுவும் ஒன்றாகச் செய்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.   மிக்க நாட்களாயிற்று . இந்தப்பக்கம் வந்து.
பனீர் குறைவாகஇருந்தது.   அதனால் உருளை சேர்த்து செய்தது.  பார்க்கலாம் . வேண்டிய பொருட்களை.
பனீர்----200 கிராம்.    வேகவைத்த உருளைக்கிழங்கு திட்டமான ஸைஸ் --3
பொடியாக நறுக்கிய  பச்சை மிளகாய்--2,   பொரிப்பதற்கு எண்ணெய்,  கார்ன்ஃப்ளேக்ஸ் மாவு --2 டீஸ்பூன்.

மஸாலா பொடிக்க  லவங்கம்--4, மிளகு அரை டீஸ்பூன்,   ஏலக்காய்---2,பட்டை சிறிதளவு.    இவைகளை சுமாராக பொடித்துக் கொள்ளவும்.

வேண்டிய பொடிகள்.  மிளகாய்ப்பொடி---1 டீஸ்பூன்.  மஞ்சள்பொடி  அரை டீஸ்பூன்.தனியாப் பொடி-- சீரகப்பொடி முறையே  அரை டீஸ்பூன்.

அரைப்பதற்கு  தக்காளி--2,     இஞ்சி  அரை அங்குல நீளம்.வெங்காயம்--2

முந்திரிப்பருப்பு ---8
ருசிக்கு உப்பு.  தூவ மல்லி இலை சிறிது.
தாளிக்க  பிரிஞ்சி இலை--1 ,  நெய் சிறிது.

செய்முறை.
வேகவைத்த உருளைக்கிழங்கைத் தோல் நீக்கி மசித்துக் கொள்ளவும்.
அதனுடன்  பனீரையும் உதிர்துச் சேர்த்து நன்றாகப் பிசையவும்.  ;சற்றுக் குறைவாகவே  உப்பும்,  பச்சை மிளகாயும் சேர்த்து,கார்ன் மாவையும்  கலந்து  தண்ணீர் விடாமல்  கெட்டியாகப் பந்து போல் பிசைந்து,   ஸமமான உருண்டைகளாகப்  பிரித்து உள்ளங்கையில் வைத்து சிறிது தட்டையான ஷேப்பில் பிரஸ் செய்து    கோப்தாக்களை  செய்து  வைக்கவும்.

வெங்காயம்,தக்காளி இஞ்சியைத் தண்ணீர் விடாது கெட்டியாக அரைத்து  எடுத்துக் கொள்ளவும்.    முந்திரிப் பருப்பையும்  ஊறவைத்து,  தனியாக அறைத்துக் கொள்ளவும்.

மஸாலாதான் முன்பே பொடிக்கச் சொல்லி விட்டேன்.மீதி பொடிகள்தான்.
இப்போது வாணலியில் எண்ணெயைக்  காய வைத்து  பனீர்க்கலவை கோப்தாக்களை  பொரித்து எடுக்கவும்.




மற்றொரு வாணலியில்  இரண்டுஸ்பூன் நெய்யும் எண்ணெயுமாகக் கலந்து சூடுபடுத்தி,  பிரிஞ்சி இலையைத் தாளித்து   அரைத்தத் தக்காளி வெங்காய விழுதைக்  கூட்டிக் கிளறவும்.  சேர்ந்து வரும் போது, மஸாலாப் பொடிகள் மற்றும் பொடிகளைச்  சேர்த்துக்  கிளறி   முந்திரி   அரைத்திருப்பதையும் சேர்க்கவும். ஒரு கொதி வந்த பிறகு திட்டமாக  வேண்டிய உப்பு சேர்த்து    இரண்டு கப் தண்ணீர் சேர்த்துக் கிளறி கொதிக்க விடவும்.கொதிக்கும் கலவையை  நேரடியாக  ட்ரேயில் பரவலாகப் பரத்தியிருக்கும்   கோப்தாக்களின் மேல் விடவும்.
சூட்டில் ஊறிக்கொண்டு ஜம் என்று இருக்கும் கோப்தாக்கள். நேராக உணவு மேஜையின் மேல் வைக்க வேண்டியதுதான். கொத்தமல்லிஇலை தூவவும்.
படம் ஆரம்பத்திலேயே இருக்கிறது. பூரி,ரொட்டி,பரோட்டா எதனுடன் வேண்டுமானாலும் சாப்பிடலாம். உங்கள் இஷ்டம்.