Thursday 27 August 2015

குதிரைவாலியரிசிக் கிச்சடி.

தமிழ்நாட்டில் அநேகமாக  உடல்நலம் ஸரியில்லை என்றால் லேசான ஆகாரமாகக் கஞ்ஜி வைத்துக் கொடுப்பது வழக்கம்.    பத்தியம் என்றால்  காரமில்லாத  மிளகுரஸம், சாதம் இப்படி வழக்கம். இதுவே வட இந்தியாவில் கஞ்சிப் பழக்கமெல்லாம் கிடையாது. ஜுரம்,குளிர்,வயிறு ஸரியில்லை போன்றவைகளுக்குக் எளிதான லேசான ஆகாரம் என்றால் கிச்சடிதான். சற்று உடல்நலம்  சுமாரானால்   கறிகாய்கள் சேர்த்துக் கிச்சடிதான்.  அரிசி பருப்பு சேர்த்துச் செய்யும் கிச்சடியைக் குக்கரில் செய்தால் ஸரியான ருசி வராது என்று  நேர்முகமாகப் பாத்திரத்தில் வேக வைத்தே செய்வார்கள்.   ஒருநாள் ஸாதாரணமாக   குதிரைவாலி அரிசியில் செய்து சாப்பிடுவோம் என்று கிச்சடி  செய்தேன். கறிகாய்கள் சேர்த்து  பருப்பு சேர்க்காமல் சிறுதானியவகை  கிச்சடியும் ருசிக்கக் கிடைத்தது. நீங்களும் செய்து ருசிக்கலாமே!
 சிறுதானியங்கள் இப்பொழுது பிரபலமாகிக்கொண்டு வருகிரது.  உடல்நலத்திற்குகந்ததகவும் இருக்கிறது.  பார்க்கலாமே. வேண்டும் ஸாமான்கள். நான் ஒரு அரைகப் அளவிற்குச் செய்தேன்.

குதிரைவாலி அரிசி  அரைகப்.  நறுக்கிய வெந்தயக்கீரை ஒரு டேபிள்ஸ்பூன்
 நறுக்கிய சில துண்டுகள் கேப்ஸிகம்,  சின்ன ஸைஸ் கேரட் ஒன்று நறுக்கியது,ஒரு பிடி நறுக்கிய வெங்காயம்,ஒரு தக்காளியின் சிறு துண்டுகள், இரண்டாகக் கீறிய பச்சை மிளகாய் ஒன்று.  சிறியதுண்டு இஞ்சி. இரண்டு மூன்று டீஸ்பூன்ஸ்பூன் எண்ணெய்.
செய்முறை.    குதிரைவாலி அரிசியை அரைமணிநேரம் ஊறவைத்து நன்றாகக் களைந்து  வடிக்கட்டவும்.
சிறிய குக்கரில்  எண்ணெயைக் காயவைத்துத் துளி சீரகம்
தாளித்துக் கொட்டி வெங்காயத் துண்டுகள்,  மற்றும் கீரையை வதக்கவும்.  மற்ற காய்கறித்துண்டுகள்,பச்சைமிளகாய் சேர்த்துப் பின்னும் வதக்கவும்.  வடிக்கட்டி வைத்திருக்கும் அரிசியைச் சேர்த்து நன்றாகப் பிரட்டி மூன்று பங்கு தண்ணீரைச் சேர்க்கவும். இஞ்சியைத் தட்டிச் சேர்த்து  திட்டமாக உப்பும் சேர்த்து பிரஷர் குக்கரில் நான்கு விஸில் வரை வைத்திருந்து இரண்டொரு நிமிஷம் ஸிம்மில் வைத்து இறக்கவும்.   சற்றுத் தளர்வாக கிச்சடி வெந்திருக்கும்.  உடன் தயிர்ப்பச்சடியுடன் சாப்பிட ருசியாக இருக்கும்.    தளர்வாக வேண்டாமென்றால் தண்ணீரைக்  குறைவாக வைத்து , ஒரு விஸில் குறைவாகவே இறக்கலாம்.
இதுவே சிறிது  பயத்தம் பருப்பு சேர்த்தும் செய்யலாம். எளிமையான  ஆரோக்கியமான   குறிப்பு.  மேலும் வேண்டிய காய்களைச் சேர்த்தும் செய்யலாம்.

7 comments:

  1. காமாஷிமா,

    இப்போ எங்கு பார்த்தாலும் சிறுதானிய உணவுகள்தான். தானியங்களை மாற்றிமாற்றி சாப்பிடுவதும் நல்லதுதான்.

    குதிரைவாலியைப் பார்க்க நொய் அரிசி மாதிரி தெரியுது. படங்களிலேயே கிச்சடியின் ருசி தெரியுது. அன்புடன் சித்ரா.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம். அரிசி நொய்யிலும் மெலிதான நொய் போலதான் இருந்தது. இந்த தானியத்தை !இப்போதுதான் பார்த்தேன். ருசி நன்றாகவும்,புதியதாகப் போட ஒன்றாகவும் கிடைத்தது. வரவுக்கும்,கருத்திற்கும் மிகவும் நன்றி பெண்ணே! அன்புடன்

      Delete
  2. நிறைய எழுத வேண்டும் என்று நினைக்கிறேன். சிறுதானியங்கள் எல்லாமாக வறுத்து அரைத்த மாவுதான் எனக்கு இரண்டுவேளை கஞ்சி செய்ய உதவுகிறது. சாமை, அரிசி கூட அரிசி நொய் மாதிரிதான் இருக்கிறது. உன் மறுமொழிக்கு மிக்க மகிழ்ச்சி. நன்றி அன்புடன்

    ReplyDelete
  3. எனக்கு இங்கே இந்த தானியங்கள் கிடைப்பதில்லை...இந்த முறைதான் கம்பு, அதுவும் மாவாக கிடைத்தது. குதிரைவாலி கிச்சடி நல்லா இருக்கும்மா!!

    ReplyDelete
    Replies
    1. கம்பு மாவைக் கொண்டும் பல தினுஸுகள் செய்யலாம். அடுத்து எழுதுவாய். ஸந்தோஷம். நல்லா இருக்கம்மா. பின்னூட்டமும் நன்றாக இருக்கு. அன்புடன்

      Delete
  4. இதுவரை இந்த சிறுதானியங்களை பயன்படுத்தியதே இல்லை. ஆனால் இந்த செய்முறைகளைப் படிக்கும்போது செய்து பார்க்கலாம் என்றே தோன்றுகிறது. ஒரு மாற்றம் இருக்கும் இல்லையா?

    ReplyDelete
  5. வரகு,சாமை,குதிரைவாலி இப்படிப்பட்ட தானியங்களில் எதைச் செய்தாலும் நன்றாகவே வருகிறது. அரிசிக்கு மாற்றாக உபயோகித்துப் பாருங்கள். மொத்தத்தில் சிறுதானியங்கள் வரப்ரஸாதமே. வருகைக்கு நன்றி. அன்புடன்

    ReplyDelete