Thursday 7 December 2017

மூலிகை மிக்ஸ்



மூலிகையைத் தேடிக்கொண்டு போகவேண்டுமா.  அப்படியெல்லாமில்லை.  ஸுலபமாக நாம் உபயோகிக்கும் ஸாமான்கள்தான்.
பெயர் கொஞ்சம்  மாறுதலாயிருந்தால் படிக்கத் தூண்டும்.  செய்யவும் தூண்டும். இது எந்தவகையோ தெரியாது. ஆனால்  சாப்பிடத் தூண்டும்.பசியையும் தூண்டும்.  செய்வதும் ஸுலபம்தான்.  வேண்டியவைகளைப் பார்ப்போமா.

வீட்டிலிருந்தவைகளைக் கொண்டே  செய்த  ருசியான ஒரு பொடி.
பச்சைகறிவேப்பிலை--- இரண்டுகப்.சுத்தம் செய்து ஈரமில்லாமல் துணியில் பரத்தி வைக்கவும்.
முதல்நாள் வாங்கிய புதினாவைக்  காயப் போட்டிருந்தேன் . அது அரை கப் இருக்கும்.
கடலைப்பருப்பு----இரண்டு டேபிள்ஸ்பூன்.
உளுத்தம் பருப்பு ----ஒரு டேபிள்ஸ்பூன்
துவரம்பருப்பு----இரண்டு டேபிள்ஸ்பூன்
மிளகு,சீரகம் ---வகைக்கு அரை டீஸ்பூன்
வெள்ளை எள்---ஒரு டேபிள்ஸ்பூன்
காய்ந்த குண்டு மிளகாய்----நான்கு
ஒரு நெல்லிக்காயளவு புளி
உப்பு,பெருங்காயம் தேவைக்கு.
செய்முறை
வாணலியை அடுப்பில் காயவைத்து  எள்ளைப் போட்டு படபடவென்று பொரியும் படி சிவக்க வறுத்து எடுக்கவும்.
அதே வாணலியில்  பருப்புகளையும் தனித்தனியாக எண்ணெய் விடால் சிவக்க வறுத்து எடுத்துக் கொள்ளவும்.தீ நிதானமாக இருந்தால் தீயாமல் பருப்புகள் வறுபடும்.  மிளகு சீரகத்தையும் லேசாக வறுத்துக் கொள்ளவும்.
புளியையும் பிய்த்துப் போட்டு வறுத்தெடுக்கவும்.
மிளகாயைச் சொட்டு எண்ணெய் விட்டு வறுத்தால்தான் நல்லது.ஒரு அரை டீஸ்பூன் எண்ணெயை வாணலியில் காயவைத்து
   கறிவேப்பிலையைப் லேசாக வறுத்து  தீயை நிறுத்தி விடவும்  அதிலேயே வைக்கவும்.
நமுத்துப்போகாமல் இருக்கும்.
யாவும் ஆறிய பின்னர்    பருப்புகள்,மிளகு சீரகம்,மிளகாய்இவைகளை கரகர பதத்தில்  மிக்ஸியில்  பொடிக்கவும்.  வறுத்தபுளி, அல்லது  புளிப் பொடியாக இருந்தால் அதையும், வறுத்த எள்,உப்புசேர்த்து ஒரு சுற்று சுற்றவும்.  வறுத்த கறிவேப்பிலை,காய்ந்த புதினா இவைகளையும் சேர்த்து   பருப்புப்பொடி பதத்தில் அரைத்தெடுத்து   பெருங்காயப்பொடி கலந்து  ஒரு பாட்டிலில் பத்திரப் படுத்தவும். மிகவும் நைஸாக பொடிக்கக் கூடாது.
சாதத்தில்  நெய் விட்டுக் கொண்டு இப்பொடியைச் சேர்த்து சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும்.  பச்சடி,மோர்குழம்பு,வெந்தயக்குழம்பு இவைகள் ஜோடி சேரும்.  தாளித்துக்கொட்டிக் கலந்த சாதமாகவும் தயாரிக்கலாம்.
நான் நாரத்தை அல்லது எலுமிச்சை இலைகளையும் ஒன்றிரண்டு உடன் சேர்ப்பேன்.  வாஸனையாக இருக்கும்  எதுவும் மற்றவர்களுக்கு விருப்பம் வேண்டுமே!












19 comments:

  1. ஆஹா... காமாட்சியம்மாவின் ரெசிப்பி.

    இதை ஏதோ மூலிகை மிக்ஸ் என்று சொல்லிவிட்டீர்களே. கருவேப்பிலை புதினா பொடி என்று சொல்லிடலாமே. பொடி அருமையா இருக்கும். (வீட்டில், எனக்கு மட்டும்தான் புதினா பிடிக்காது. மற்ற எல்லாருக்கும் புதினா சேர்த்தா யம்மி என்று சாப்பிடுவார்கள்). சொல்லியிருக்கும் எல்லா ஐட்டமும் சுலபமாகக் கிடைக்ககூடியவை. பசங்க வரும்போது ஒரு நாள் நானே செய்து அசத்த முயற்சிக்கிறேன்.

    இதுக்கெல்லாம் என் ஹஸ்பண்ட், உளுத்தமா பச்சிடின்னு ஒண்ணு செய்வா. பசங்களுக்கு ரொம்பப் பிடிக்கும். எனக்கு வெள்ளரி பச்சடி இதற்குத் தொட்டுக்கலாம்னு தோணுது.

    இது சமீபத்துல நீங்க பண்ணினீங்களா?

    ReplyDelete
    Replies
    1. பெயர் கொஞ்சம் மாறுதலாயிருந்தால் படிக்கத் தூண்டும். கீரணம் சொல்லி இருந்தேனே! அந்த உளுத்தமா பச்சடிபேர் டாங்கர் பச்சடி. அதனுடனே வெள்ளரியும் சேர்த்துக்கூட ஒரு பச்சடி எழுதினதாக ஞாபகம். கறிவேப்பிலை அதிகமாகி விட்டால் செய்வேன். இது சென்னையில் செய்தது. நான் இப்பொழுது எல்லாம் வேலை செய்ய லாயக்கில்லை. இனி மலரும் நினைவுகளாகஇருக்குமோ என்னவோ. நன்றி. அன்புடன்

      Delete
  2. குறித்துக் கொண்டிருக்கிறேன். கறிவேப்பிலைப்பொடி செய்து சாப்பிட்டிருக்கிறேன். ஆனால் எல் மிளகு சீரகம் எல்லாம் சேர்த்ததில்லை. செய்து பார்க்கிறேன் அம்மா.

    ReplyDelete
    Replies
    1. வாஸனையுடன் வாஸனை. நீங்களெல்லாம் ரஸித்து பதில் எழுதியதே செய்த மாதிரிதான். எளிய வீட்டிலேயே கிடைக்கும், புழங்கும் ஸாமான்கள். நன்றி அன்புடன்

      Delete
  3. அதேபோல புதினா, கொத்துமல்லியை ஜோடி சேர்த்திருக்கிறேன். கறிவேப்பிலையோடு சேர்த்ததில்லை.

    ReplyDelete
    Replies
    1. புதினா கொத்தமல்லி பச்சையாகவே ஜோடி சேர்க்கலாம். பொடி என்று பசை இல்லாது செய்ய புதினா லாயக்கு. அவ்வளவுதான். அன்புடன்

      Delete
  4. எள் ஏன் 'கறுப்பு எள்'னு எழுதலை? வெளிநாடுகள்ல கறுப்பு எள் கிடைப்பது கடினம். கறுப்பு எள் உபயோகப்படுத்தினா நிறம் கொஞ்சம் மங்கும். அதனாலா?

    ReplyDelete
    Replies
    1. நம்முடைய அடுத்த தலைமுறையினர் விரும்பி வாங்கும் பொருள்கள் வேலை ஸுலபமானவை. அவர்கள் அதைதான் உபயோகப் படுத்துவார்கள். அதைதானே நாமும்உபயோகப்படுத்த முடியும். கறுப்பு எள்ளை அலம்பித்,தரையில் தேய்த்துப் புடைத்து,வறுத்து அதெல்லாம் இப்போது இல்லை. சுலபம் எதுவோ அதுதான். இப்போது நைலான் எள் என்று இன்னும் ஒரு பளிச்சென்ற தோற்றத்துடனும் ஒன்று இருக்கிறதாம். காரணம் இதுதான். அன்புடன்

      Delete
  5. காமாட்சி அம்மா வின் ரெசிப்பி இன்று கண்ணில் உடனேயே பட்டு விட்டது:)..

    பொடி சூப்பர்.. இட்லிப் பொடி ஆக இருந்தது வரவர மூலிகைப் பொடியளவுக்கு வளர்ச்சி பெற்று விட்டது:)..

    நான் கறிவேப்பிலை மட்டும் தனியே அரைத்து பொடியாக வைத்திருந்தேன், தோசை சுடும்போது மேலே தூவிச் சுட்டு எண்ணெயும் ஊற்றி விட்டால் கறிவேப்பிலைத்தோசை:))..

    புதினாப் பொடி, இங்கு சமரில் பக்கத்து வீட்டு மதில் கரையில் புதினா பற்றைபோல இருக்கும், யாரும் தொடுவதில்லை, நான் மட்டும் அப்பப்ப சட்னி செய்ய எடுப்பேன்... வெள்ளையர்கள் சும்மா வாசத்துக்கு மட்டுமே சேர்ப்பினம்.

    ஏனைய இலைகள் முற்றிப் பழுத்திடும். இனி அடுத்தமுறை பொடி செய்திடுறேன்.. இதுவரை தெரியாமல் இருந்தேன்:)..

    ReplyDelete
    Replies
    1. புதினாவிலும் வைல்ட் இருக்கிறது. சற்றுக் கசப்பாக இருக்கும். தமிழ்க்கடைகளில் வாங்கும் புதினா ஜெனிவாவில் நன்றாக இருக்கும். நான் இப்போது இந்தியாவில். குளிர்காலப் புதினா நன்றாகஇருக்கும்.
      பருப்பெல்லாம் போட்டு அரைத்திருப்பதால் இட்டிலிப்பொடிபோலத் தோன்றுகிறதா. சாதத்திற்குதான் இது மிகவும் ஏற்றது. நிறைய கறிவேப்பிலைதான். இட்டிலிப்பொடி என்றால் பருப்புகளும், எள்ளும் , மிளகாயும் அதிகம் வேண்டும் இல்லையா. இன்னும் கரகரப்பாகவே பொடிக்கணும் இல்லையா!இப்படியெல்லாம் நான் நினைப்பேன். உங்கள் ருசிக்கேற்றவாறு மாற்றுங்கள். பெயர் கவர்ச்சிக்கு மூலிகைப்பொடி. மூலிகைமாதிரி டாலர் கொடுத்துதானே கறிவேப்பிலை வாங்குகிறீர்கள். சூப்பர் எழுதினதற்கு மிகவும் ஸந்தோஷம். கொஞ்சமாகச் செய்து ருசி பார்த்துப் பிறகு செய்யுங்கள். நன்றி அதிரா. அன்புடன்

      Delete
  6. எனக்கும் ரொம்ப பிடிக்கும் காமாட்சியம்மா .சுடு சாதத்தில் நல்லெண்ணெய் விட்டு இப்படி பொடிவகைகளை கலந்து சாப்பிடுவேன் ..
    இதுவரைக்கும் சேர்த்ததில்லை ..அடுத்தமுறை சேர்த்து அரைக்கிறேன் .நன்றிம்மா

    ReplyDelete
    Replies
    1. அதிரா என்றால் அஞ்சு வந்துதானே ஆகவேண்டும் என்று நினைத்த மாத்திரத்தில் ஆஜர். நூறு வயதுஉனக்கு. ஸம்வாதமில்லாமல் அஞ்சுவும்,அதிராவும் ஆஜர். என்ன அதிசயம்.!. சேர்த்து அறைத்துச் சாப்பிடு. ஸந்தோஷமும் நன்றியும். அன்புடன்

      Delete
  7. அருமையான பொடி.
    கருவேப்பிலை. புதினா, கொத்துமல்லி, புளி, உளூந்து மிள்காய், வ்றுத்து சேர்த்து கெட்டி துவையல் செய்து சாப்பிட்டு இருக்கிறேன்.
    கருவேப்பிலை பொடி செய்து இருக்கிறேன்.
    புதினா கருவேப்பிலை பொடி செய்தது இல்லை.
    செய்து பார்க்கிறேன்.
    நன்றி அக்கா.

    ReplyDelete
    Replies
    1. வாங்க வாங்க . இந்தப்பொடியெல்லாம் சாப்பிடக்கூட டைம் வேண்டும். துவையல் என்றால் ஸுலபமாகச் சாப்பிட்டு விடலாம். சட்டென்று ஒரு அவஸரத்திற்கு உதவும். செய்து பாருங்கள். நன்றி. அன்புடன்

      Delete
  8. அங்காயப் பொடி கூடக் கடையில் வாங்கும்
    வகைக்கு வந்துவிட்டேன். உங்களைப் பார்த்தால் பெருமையாக இருக்கிறது காமாட்சி மா.
    மனம் உற்சாகமா இருந்தால் போதும்.
    வயசு என்ன கணக்கு.

    ReplyDelete
    Replies
    1. எல்லா வேலையும் ஸுலபமாக முடிந்து விடும் நம் ஸந்ததியினருக்கு. எல்லாம் கிடைக்கிறதே!அதைச் சொல்லுங்கள். மனம் உற்சாகமாக இருந்து இப்படி எதையாவது எழுதி, உங்களைப்போன்றவர்களின் பின்னூட்டம் கிடைத்தால் அன்னேரம் உற்சாகம்தான். வயது என்ன கணக்கு, என்கிறீர்களா, உடம்பில் தெம்புள்ளவரை கணக்கிடவேண்டாம். அப்புறம் வயது இரட்டிப்பாகத் தோன்றும். இதுபுதுமொழி . அன்பான பின்னூட்டம். நன்றி. அன்புடன்

      Delete
  9. புதினா, எள், மிளகு, சீரகம் சேர்க்காமல் கருகப்பிலைப் பொடி செய்வேன். இம்மாதிரியும் செய்து பார்க்கணும்.

    ReplyDelete
    Replies
    1. பாருங்கள்,பாருங்கள். பதிலும் சொல்லுங்கள். நன்றி. அன்புடன்

      Delete
  10. காமாட்சி அம்மா எப்படியோ பதிவுகள் விட்டுப் போய்விடுகிறது...டடேஷ் போர்டில் கீழே போய்விட்டால்...

    கறிவேப்பிலை புதினா கொத்தமல்லி சேர்த்துச் செய்வதுண்டு ஆனால் து பருப்பும், எள்ளும், மிளகு ஜீரகம் சேர்த்துச் செய்ததில்லை...குறித்துக் கொண்டேன். பொடிகள் சூடா சாதத்தில் சேர்த்துப் பிசைந்து சாப்பிட பிடிக்கும்...குறித்துக் கொண்டு விட்டேன்...மிக்க நன்றிமமா

    கீதா

    ReplyDelete