Saturday, 13 April 2019
Monday, 14 January 2019
Wednesday, 2 January 2019
ஆலு போஸ்தா
பெயரைப் பார்த்ததுமே புரிந்திருக்கும். வங்காளத்தவர்களின் தயாரிப்பு முறை இது.
நவராத்திரிக்கு முன்பு தில்லியிலிருக்கும்போது நாட்டுப்பெண்ணின் சிநேகிதி இதைக் கொண்டு வந்திருந்தாள். நான் பாரக்பூரிலிருந்தபோது எப்போதோ சாப்பிட்டது நினைவுக்கு வந்தது. சுமார் அறுபது வருடங்கள் ஆகியிருக்கும். அந்த தயாரிப்பே ஞாபகத்தில் இருந்ததில்லை.
ஸரி காமாட்சிக்காவது எழுதியனுப்பலாம் என்று குறிப்புகள் கேட்டேன். படங்களும் அவள் கொடுத்ததுதான். என்னால் எதுவும் செய்ய முடிவதில்லை. மிக்க சுலபமானமுறை.
பாருங்கள் பிடித்தால் செய்து பாருங்கள். வங்க மொழியில் கசகசாவின் பெயர் போஸ்தா. ஆலு உருளைக்கிழங்கின் பெயர்.
பாஞ்ச் புரண் என்று சொல்லுவார்கள். அது அவர்களின் சமையலில் முக்கிய இடம் வகிக்கும் பொருட்கள். கசகசாவும் , சேர்த்து மிகவும் எளிய முறையில் தயார் செய்த சின்ன உருளைக்கிழங்கின் கலவைதானிது. சாதத்துடன் சாப்பிடவே வங்காளத்தவர்களும் விரும்புவார்கள். ரொட்டி,பூரி,ஏன் தோசையுடனும் சாப்பிடலாமே! குட்டி உருளைக்கிழங்கில் முன்பு நான் சொல்லுகிறேனில் எழுதிய ஆலுதாம் ஞாபகம் வந்தது.
ஸரி தயாரிக்கும் முறையை பார்க்கலாமா?
வேண்டியவைகள்.
சின்ன உருளைக் கிழங்கு---கால்கிலோ. சற்று அதிகமாகவும் போடலாம்.
பெரிய வெங்காயம்----மூன்று.
மிளகாய் வற்றல்---மூன்று
கசகசா---மூன்று டேபிள் ஸ்பூன்
ருசிக்கு---உப்பு
நிறத்திற்கு ---மஞ்சப் பொடி சிறிது
வதக்க,பொரிக்க வேண்டிய அளவு எண்ணெய்.
பாஞ்ச் புரண் எனப்படுவது ஒன்றும் பிரமாதமான ஸாமானில்லை.
கடுகு,வெந்தயம், சீரகம்,பெருஞ்சீரகம், ஓமம் ஆக ஐந்து ஸாமான்களே.! வகைக்கு அரைஸ்பூன் தாளித்துக் கொட்டப் போதுமானது. இவற்றுடன் ஒரு பிரிஞ்ஜி இலை என்ற தேஜ் பத்தாவும் போட்டிருந்தனர்.
கசகசாவைச் சிறிது தண்ணீரில் ஊரவைக்கவும். உருளைக்கிழங்கை நீங்கள் வழக்கமாக வேக வைக்கும் முறையில் முக்கா ல்பங்கு வெந்த பதத்தில் தண்ணீரில் வேகவைத்து வடிக்கட்டி, தோலை உரித்து வைத்துக் கொள்ளவும்.
ஊறவைத்த கசகசாவை மிக்ஸியின் சின்ன கன்டெய்னரில் போட்டு திட்டமானதண்ணீருடன் அறைத்துக் கொள்ளவும்.
வெங்காயத்தையும் பொடிப்பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெயைக் காயவைத்து, வெந்த உருளைக்கிழங்கைப் பொரித்து எடுத்து வைக்கவும்.
எண்ணெய் அதிகம் வேண்டாதோர் சிவக்க உருளையை வதக்கியும் சேர்க்கலாம்.
அடிகனமான வாணலியில் இரண்டு,மூன்று டேபிள்ஸ்பூன் எண்ணெயைக் காயவைத்து, முதலில் பிரிஞ்சி இலையையும் அடுத்து கடுகை வெடிக்கவிட்டு மிளகாய் மற்றும் தாளிக்கக் கொடுத்த ஸாமான்களைச் சேர்த்து மிதமான தீயில் வறுத்து நறுக்கிய வெங்காயத்தையும் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும், பொரித்து வைத்துள்ள உருளைக் கிழங்குகள், உப்பு, மஞ்சப் பொடி சேர்க்கவும்.
இங்கு போட்டிருக்கும் படத்தைவிட உருளைக் கிழங்கு சிவக்க வேண்டும். இது வதங்கும் உருளைக்கிழங்குதான். எண்ணெய் வேண்டிய அளவு விட்டு வதக்கவும்.
நன்றாகச் சிவக்க வதங்கிய பிறகு அரைத்து வைத்துள்ள கசகசாவைச் சிறிது தண்ணீர் விட்டுக் கரைத்துச் சேர்த்துக் கொதிக்க வைக்கவும்.
யாவும்கலந்து கொதித்த பிறகு இறக்கி வைத்து எதனுடன் சாப்பிட இஷ்டமோ அப்படிச் சாப்பிடவும்.
தாளிப்பும் முதலிலேயே ஆகி விடுகிறது. வேறு எதுவும் போட அவசியமில்லையாம். இரவல் குறிப்பும் படங்களும்! ரஸிக்க முடிகிறதா
பாருங்கள்.
பின் குறிப்பு-------தாளித்துக் கொட்டுவதில் ஓமத்தை நீக்கி விட்டு கருஞ்சீரகத்தைச் சேர்க்கவும். உடம்பிற்கு மிகவும் நல்லது கருஞ்சீரகம். உதவி கீதாரெங்கன்.
Subscribe to:
Posts (Atom)